16வது ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் மூத்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் மோகித் ஷர்மா குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக, சிறப்பாக பந்து வீசி ஆட்டநாயகன் விருது வென்றார். இவர் கடந்த இரண்டு சீசன்களாக ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மோகித் சர்மாவின் கிரிக்கெட் தொடக்க காலம் மற்றும் பொற்காலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியோடு அமைந்திருந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 2013-ல் இருந்து 2015 வரையான அந்த காலகட்டத்தில் விளையாட்டினார். அந்த சமயத்தில் சிறப்பாக விளையாடியதற்காக 2015ஆம் ஆண்டு இந்திய அணிக்கு விளையாடி,உலகக்கோப்பைக்கான இந்திய அணியிலும் இடம் பிடித்து விளையாடினர்.
அடுத்தடுத்த வருடங்களில் தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்த முடியாததால் அணியில் இடத்தை பறி கொடுத்தார். அதனைத் தொடர்ந்து வேகப்பந்துவீச்சாளர் 2016-2018 க்கு இடையில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். மேலும் அவர் 2019 இல் சென்னை அணிக்கு திரும்பியபோதும், மோகித் சர்மா அணிக்காக ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டுமே விளையாடினார். இந்த சீசனில் குஜராத் அணிக்காக விளையாட ஏலத்தில் எடுக்கப்பட்டார்.
குஜராத் அணி விளையாடிய ஆரம்ப போட்டிகளில் இவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றாலும் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் வேகப்பந்துவீச்சாளர் யாஸ் தயாள் கடைசி ஓவரில் 30 ரன்கள் கொடுத்து வெற்றி பெறும் சூழ்நிலையில் இருந்த குஜராத் அணியை தோல்விக்கு அழைத்து சென்றார். இதனால் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. அவருக்கு பதிலாகத்தான் மோகித் சர்மா அணியில் இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆட்டநாயகன் விருது வென்ற பிறகு மோகித் சர்மா தனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்து பேசும்போது “எனது ஐபிஎல் மற்றும் இந்திய வாழ்க்கையின் பெரும்பகுதி மஹி பாயின் கீழ் இருந்தது. எனது நல்ல முடிவுகள் அவருக்குக் கீழ் தான் அதிகம் வந்துள்ளது. என்னிடமிருந்து சிறந்ததைப் பெற்றதற்காக அவருக்குப் பெரிய பெருமை சேரும். ஆனால் நீங்கள் விளையாட்டை எவ்வளவு ரசிக்கிறீர்கள் என்பதுதான் எனக்கு முக்கியமானது. 2013-2016 எனது கேரியரில் பொற்காலம், ஆனால் அதைவிட இந்த தொடர் தான் நான் அனுபவித்து விளையாடும் சிறந்த காலம்” என்று கூறினார்.
மேலும் அவர் கூறும்போது “இந்த அணியில் யாரையும் யாருக்காகவும் மாற்ற முடியாது. யாஸ் தயாள் இந்த ஆட்டம் விளையாடியிருக்கலாம், ஆனால் அவருக்கு காய்ச்சல் இருந்தது, அதனால் விளையாட முடியவில்லை. நான் விளையாடுவதற்கு அந்த சூழ்நிலையையே காரணமாக இருந்தது. போட்டிக்குப் பிறகும் அவருடன் நீண்ட நேரம் பேசினேன். அவர் என்னுடன் அமர்ந்திருந்தார். ஆட்டத்திற்குப் பிறகு” என்று கூறினார்.