கடந்த செவ்வாய்க்கிழமை மும்பை அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் ஹைதராபாத் அணி பதினான்கு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதன் மூலம் ஹைதராபாத் அணி விளையாடி 5 போட்டிகளில் மூன்று போட்டிகளில் தோல்வி தழுவி புள்ளி பட்டியலில் மிகவும் மோசமான நிலையில் டெல்லிக்கு அடுத்ததாக உள்ளது.
ஹைதராபாத் அணிக்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 193 ரண்களை துரத்திய பேட்ஸ்மேன்கள், அணியின் ஓபனராக களம் இறங்கிய மயாங்க் அகர்வால் 48 ரன்கள் அடித்தாலும்,அவர் விளையாடிய விதம் மகிழ்ச்சியை தரவில்லை. சிறப்பாக விளையாடிய கிளாஸனும் அந்த ஓவரில் அதற்கு முன்பாக 21 ரன்கள் அடிக்கப்பட்டு இருந்தாலும் கடைசி பந்தையும் சிக்ஸருக்கு அனுப்ப ஆசை பட்டு வெளியேறினார். பின்னர் வந்த யாரும் பொறுப்பாக விளையாடாதது, அணியின் தோல்விக்கு காரணம் என முன்னாள் இந்திய சுழல் பந்துவீச்சாளர் முரளி கார்த்திக் கூறியிருந்தார். மேலும் அவர் கூறும்போது அப்துல் சமத்திற்கு முன்பாக வாசிங்டன் சுந்தரை களம் இறக்கிருக்க வேண்டும்,அவ்வாறு இறக்கி இருந்தால் அணிக்கு சாதகமான முடிவுகள் அமைந்திருக்கும் என்று கூறினார்.
இது குறித்து முன்னாள் இந்திய சுழற்பந்துவீச்சாளர் முரளி கார்த்திக் கூறும் போது “
மன்னிக்கவும், நான் ஒருபோதும் யாரையும் விமர்சிப்பதில்லை, ஏனென்றால் நாங்கள் அனைவரும் விளையாட்டை விளையாடியுள்ளோம். இந்த ஏசி அறையில் நாங்கள் வசதியாக அமர்ந்திருக்கிறோம், அது எளிதானது அல்ல. ஆனால் அப்துல் சமத் மீது அவர்கள் காட்டிய நம்பிக்கையை நான் புரிந்து கொள்ளவே இல்லை. அந்தத் தாக்கத்தை அவர் ஏற்படுத்தியதில்லை. வாஷிங்டன் சுந்தர் ஒரு சிறந்த வீரர், இந்தியாவுக்காக விளையாடியுள்ளார். அவர் ஏன் பயன்படுத்தப்படவில்லை? இதுபோன்ற தவறுகளை நீங்கள் தொடர்ந்து செய்தால், நீங்கள் புள்ளிகள் பட்டியலில் குறைவாகவே இருப்பீர்கள்”என்று கார்த்திக் கூறினார்.
2022 ஆம் ஆண்டு நடைபெற்ற மெகா ஏலத்தின் போது ஹைதராபாத் அணியால் தக்கவைக்கப்பட்ட வீரர்களில் அப்துல் சமத்தும் ஒருவர், அவர் பல பிரகாசமான கேமியோக்களை அணிக்காக செய்திருந்தாலும், சன்ரைசர்ஸுடன் அவர் தனது திறமையை இன்னும் நியாயப்படுத்தவில்லை என்று பலர் நம்புகிறார்கள். அவர் 2022 சீசன் முழுவதும் அணிக்காக இரண்டு ஆட்டங்களில் மட்டுமே விளையாடினார், இந்த ஆண்டு, அவர் மூன்று போட்டிகளில் 62 ரன்கள் எடுத்தார், ஆட்டமிழக்காமல் 32 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.